'தனிமைப்படுத்தப்பட்ட வீடு... உள்ளே நுழையாதே!'... சென்னை மாநகராட்சியின் இந்த ஸ்டிக்கர் சொல்வது என்ன!?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவால் இதுவரை தமிழகத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அனைவரும் அரசிடம் தங்களது வெளிநாட்டு பயண விவரங்களைக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.
அவ்வாறு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணிகள் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்.
வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் இருந்து தமிழகம் வந்தவர்கள் குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டு கதவுகளில் கொரோனா தொற்று குறித்தான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் இதுவரை சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 3000 பேர் இல்லத்தில் இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மற்றவர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விலகி இருப்பதற்காக பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில், இந்த நோட்டீஸ்கள் வடிவமைக்கப்பட்டு வீட்டின் கதவுகளில் ஒட்டப்பட்டுள்ளன.
