‘கர்ப்பமாக’ இருப்பதாக பரிசோதனைக்கு வந்த ‘3 சிறுமிகளால்’ பரபரப்பு... விவரங்களைக் கேட்டு ‘அதிர்ந்துபோன’ மருத்துவர்கள்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராணிப்பேட்டையில் கர்ப்பம் தரித்த நிலையில் மகப்பேறு சிகிச்சைக்காக வந்த 3 சிறுமிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள குருவராஜப்பேட்டை, அமீர்பேட்டை, பாப்பான்குட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட, திருமணமான 3 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அந்தந்த கிராமப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு பரிசோதனைக்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமிகளைப் பரிசோதித்துவிட்டு, அவர்களுடைய விவரங்கள் குறித்து கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதும், பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் அவர்களுக்கு குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் அதில் ஒரு சிறுமிக்கு 13 வயது மட்டுமே பூர்த்தியாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிர்ந்துபோன மருத்துவர்கள் உடனடியாக இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் அந்த சிறுமிகளின் வீடுகளுக்கு இன்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன்பிறகு இதுகுறித்த விசாரணைக்காக கர்ப்பம் தரித்த சிறுமிகள், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் கணவர்களை ராணிப்பேட்டை குழந்தைகள் நலக் குழுமத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
