‘நள்ளிரவில்’ கேட்ட குழந்தையின் ‘அழுகுரல்’... கணவன், மனைவி உட்பட ‘3 பேருக்கு’ நேர்ந்த கொடூரம்... தப்பிய ‘இளைஞர்களை’ மடக்கிப் பிடித்த போலீசார்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 09, 2020 01:19 PM

சேலத்தில் 3 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.

3 Murdered Including Husband Wife In Salem 4 Arrested

சேலம் திருமலைகிரி செம்மண்திட்டைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருடைய வெள்ளிப் பட்டறையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ், அவருடைய மனைவி வந்தனா, ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி குமார் ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். ஆகாஷ் - வந்தனா தம்பதிக்கு 6 மாத குழந்தை ஒன்று உள்ள நிலையில், அவர்கள் சன்னிகுமாருடன் தங்கராஜுக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு அவர்களுடைய வீட்டிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்க, அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் வந்தனாவும், வீட்டின் பின்புறம் ஆகாஷ், சன்னிகுமார் இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆகாஷுடைய வீட்டிற்கு அருகே வசித்துவந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சம்பவத்தன்று தப்பியோடும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்துள்ளது. அதைவைத்து அவர்கள் இந்தக் கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவர்களுடைய வீட்டை சோதனை செய்தபோது அங்கு மதுபாட்டில்கள் சிதறிக் கிடந்துள்ளன.

அதைவைத்துப் பார்க்கும்போது மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வினோத், தினேஷ், சுராஜ், விஜி என்ற அந்த 4 இளைஞர்களும் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்குச் செல்லும் ரயிலில் ஏறித் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட, இன்று அதிகாலை பாலக்காடு ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #SALEM #UTTARPRADESH #HUSBAND #WIFE #BABY