‘விடிய விடிய பப்ஜி’... ‘பள்ளிக்கு போவதாகக் கூறிய மாணவர்கள்’... 'பெற்றோருக்கு நேர்ந்த துயரம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 21, 2019 11:04 PM
கோவை அருகே, பள்ளிக்கு செல்வதாக சொல்லி சென்ற மாணவர்கள், இருவர் மாயமானதில் ஒருவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் உதவி விங் கமாண்டர்களாக உள்ள விவேக் சிங்கின் மகன், கீத்லு பல்தேவ் தத்தானியாவும், பல்தேவ் என்பவரது மகன் வருண் சிங் ரத்தோரும், அருகில் உள்ள பள்ளியில் 9-வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும், கடந்த புதன்கிழமையன்று விடிய விடிய பப்ஜி விளையாண்டுள்ளனர். பெற்றோர்கள் கண்டித்ததை அடுத்து, இவர்கள் கடந்த வியாழக்கிழமையன்று பள்ளிக்குச் செல்வதாகக் கூறி சைக்கிளில் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
மேலும் மாணவன் வருண் சிங் ரத்தோர் தனது வீட்டில் இருந்து 4000 ரூபாய், மற்றும் சில உடைமைகளை எடுத்துச் சென்றதாக, அவரது தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, இருவருமே பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், சூலூர் போலீசார் விசாரணையில் இறங்கினர். இருவரும் பள்ளிக்குள் செல்லாமல், வெளியே சென்று விட்டது அங்குள்ள ஒரு கேமராவில் பதிவாகி இருந்தது.
விமானப்படை வீரர்கள், தங்கள் அலுவலக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒத்துழைப்புடன் இரு தினங்களாக தேடி வந்த நிலையில், வருண்சிங் ரத்தோர் மட்டும் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சத்தியமங்கலம் வரை சைக்கிளில் சென்றதாக சிறுவன் வருண்சிங் ரத்தோர் சொன்னதாக கூறப்படுகிறது. இருவரும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானதால் காணாமல் போனதாக தகவல்கள் வெளியானது. அதேநேரத்தில் இதுகுறித்து விசாரணை நடைப்பெற்றுவருகின்ற வேளையில், கீத்லு பல்தேவ் தத்தானியாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.