‘சாகும் வரை 1 ரூபாய்க்கு தான் இட்லி விற்பேன்’.. நெகிழ்ச்சி அடைய வைத்த 85 வயது கமலாத்தாள் பாட்டி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Sep 04, 2019 11:16 AM
கோவையில் தள்ளாத வயதிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் 85 வயது பாட்டியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கோவை மாவட்டம் ஆலாந்துரை அடுத்த வடிவேலம்பாளயத்தைச் சேர்ந்தவர் 85 வயதான கமலாத்தாள் பாட்டி. அப்பகுதியில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் அவ்வளவு பிரபலம். கணவரை இழந்த நிலையில் தனி ஆளாக இட்லி கடை நடத்தி வருகிறார். 30 ஆண்டுகளுக்குமுன் 25 பைசாவுக்கு இட்லி விற்க தொடங்கியவர், 10 வருடங்களுக்கு முன்புதான் இட்லியின் விலையை ஒரு ரூபாயாக உயர்த்தியுள்ளார். இன்றும் பாரம்பரியமாக ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மியில் சட்னி அரைத்து உணவு சமைக்கிறார்.
இதுகுறித்து பிபிசி பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், ‘அரிசி, பருப்பு, தேங்காய், கடலை, எண்ணெய் இதெல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 300 ரூபாய் ஆகுது. 200 ரூபாய் லாபம் கிடைக்கும் அவ்வளவுதான். காலையில் 5:30 மணிக்கு எழுந்து சட்னி சாம்பார் செய்வேன். 6 மணிக்கு இட்லி அடுப்பை பத்தவைப்பேன். 12 மணி வரைக்கும் இட்லி ஊத்துவேன். சாகும் வரை ஒரு ரூபாய்க்கு தான் இட்லி விற்பேன். யார் சொன்னாலும் விலை ஏற்ற மாட்டேன். இன்னும் எத்தனை நாளைக்கு நான் வாழப்போகிறேன்’ என கமலாத்தாள் பாட்டி தெரிவித்துள்ளார்.