‘மனைவிய என்கூட அனுப்ப மாட்டீங்களா?’... ‘ஆத்திரத்தில் மாமியாரை அறைந்த மருமகன்’... ‘மாமனாரின் வெறிச்செயல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 18, 2019 09:53 PM

கோவையில் குடும்ப தகராறில்  மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை, மாமானார் துரத்தி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

son in law killed by his father in law due to family issue

கோவை மாவட்டம் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பெயிண்டர் ராஜேந்திரன்.  இவரும், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி- மீனா தம்பதியின் மகள் ஷாலினியும் ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.  நிறைமாத கர்ப்பிணியாக ஷாலினி இருந்த நிலையில், சரியாக வேலைக்கு செல்லாத கணவர் ராஜேந்திரன், மனைவியை சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே, கோவை  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷாலினிக்கு பிரசவ வலி வராததால், மருத்துவர்கள் திருப்பி அனுப்பியதாகத் தெரிகிறது. இதனால், ஷாலினி தமது சகோதரி வீட்டுக்கு, தாயருடன் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று, அங்கு சென்ற ராஜேந்திரன், மனைவியை தம்முடன் அனுப்பி வைக்குமாறு மாமியாரிடம் கேட்டுள்ளார். ஆனால், ஷாலினியை விட மறுத்த அவர், சரியாக வேலைக்கு செல்லாதவனுடன் தன் மகளை அனுப்ப மாட்டேன் என கூறியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரத்தில் ராஜேந்திரன், தனது மாமியாரின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையறிந்த மாமனார் தங்கமணி, மருமகனை துரத்தி சென்று, தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளார். அந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்துள்ளார். மாமியார் மீனா, தங்கமணியை தடுக்க முயன்றதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருமகனை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மாமனார் தங்கமணியை தேடி வருகின்றனர். மாமியார் மீனாவும் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஷாலினிக்கு கோவை அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

Tags : #MURDER #COIMBATORE #FATHERINLAW #SONINLAW