‘பிள்ளைகள் இன்றி வாடிய முதிய தம்பதி’... ‘மனைவி எடுத்த விபரீத முடிவால்’... ‘கணவருக்கு நேர்ந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Aug 29, 2019 02:54 PM
மனைவி தற்கொலை செய்து கொண்டதை அறிந்த முதியவர், தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோவை, இருகூரில் வசித்து வந்தவர் 75 வயதான கிருஷ்ணன். இவர் 70 வயதான தனது மனைவி சாரதாவுடன் வசித்து வந்துள்ளார். முதியவர்களான தம்பதி இருவரும் சாலையோரத்தில் கம்பங்கூழ் விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் என்று மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்கள், அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாகக் கடன் தொல்லை மற்றும் பிள்ளைகள் கண்டு கொள்ளாமல் தனிமை உள்ளிட்ட காரணங்களால் முதிய தம்பதியினர் மனமுடைந்து விரக்தியில் இருந்து வந்துள்ளனர்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 25-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய சாரதா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக, கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற கிருஷ்ணன், கிணற்றில் மிதப்பது தனது மனைவிதான் என்று தெரிந்ததும் யாரும் எதிர்பாராத நேரத்தில் கிருஷ்ணனும், கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கிருஷ்ணன் திடீரென விழுந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்துவந்த காவல்துறையினர், கிணற்றில் இருந்த சாரதாமற்றும் கிருஷ்ணன் இருவரின் உடலை மீட்டுள்ளனர். பாறையில் தலை அடிபட்டு விழுந்ததில், கிருஷ்ணன் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.