‘கதவை உடைத்துக்கொண்டு நுழையும் காட்டு யானை’.. 2 பேர் பலி..! பீதியில் கோவை மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Aug 20, 2019 02:01 PM
கோவையில் கதவை உடைத்துக்கொண்டு தொழிற்சாலைக்குள் நுழையும் காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பன்னிமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இது இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் காட்டு யானை தொழிற்சாலை ஒன்றின் கதவை ஆக்ரோஷமாக உடைத்துக்கொண்டு உள்ளே செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
இந்த யானை தாக்கியதில் பன்னிமடையை சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேசன் என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தொப்பம்பட்டி என்னும் ஊரை சேர்ந்த பிரேம் கார்த்தி மற்றும் விக்னேஷ் என்ற இருவர் வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கே வந்த காட்டு யானை பிரேம் கார்த்தியை தாக்கியுள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து விக்னேஷ் அங்கிருந்து தப்பி உயிர்பிழைத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பிரேம் கார்த்தியின் உடலை மீட்டுள்ளனர். காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யானை ஊருக்குள் வருவது தெரிந்தால் உடனடியாக 180042425456 என்ற டோல் ஃபீரி எண்ணை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.