பெரியம்மா வீட்டிற்கு சென்ற... 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்... கதறித் துடித்த தாய்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரியம்மா வீட்டிற்கு சென்ற 3 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீரராகவபுரத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீஷியனான ஹேமகுமார் (34). இவரது மனைவி சரண்யா (29). இந்த தம்பதிக்கு, 3 வயதில் மித்ரா என்ற குழந்தையும், திஷா என்ற ஆறு மாத குழந்தையும் உள்ளன. இந்நிலையில், திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் உள்ள சரண்யாவின் அக்கா லாவண்யா (35) வீட்டிற்கு தனது 2 குழந்தைகளுடன் கடந்த 21-ம் தேதி சென்றுள்ளார்.
ஏனெனில், லாவண்யாவின் கணவர் யுவராஜூக்கு உடம்பு சரியில்லாததால், அவரைப் பார்ப்பதற்காக சென்ற அவர் அங்கேயே தங்கியுள்ளார். நேற்று மதியம் 12:30 மணியளவில், வீட்டு முற்றத்தில் சிறுமி மித்ரா விளையாடி கொண்டிருந்தார். சரண்யா துணி துவைத்துக் கொண்டிருந்தார். அங்கு 50 அடி ஆழம் உடைய, திறந்தவெளி கிணறு ஒன்று இருந்தது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மித்ரா, எதிர்பாராதவிதமாக, கிணற்றில் தவறி விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரண்யா, உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை எடுத்து செல்லப்பட்ட நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை இறந்ததை அறிந்த அம்மா மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
