‘காதலனுடன் சேர சிறப்பு பூஜை’.. ‘செல்போனில் பேசிய மர்மநபர்’.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 29, 2020 01:39 PM

காதலை சேர்த்து வைப்பதாக கூறி ஆன்லைன் மூலம் பணம் பறித்து ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Youth dupes woman under the pretext of kindling love

மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண், தனது காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். இதனால் முறிந்த தனது காதலை மறுபடியும் புதுப்பிக்க முயன்றுள்ளார். அப்போது ஆன்லைனில் ‘லவ் குரு’ என வெப்சைட் ஒன்றின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது. அந்த வெப்சைட்டில் காதலனுடன் மீண்டும் சேர அறிவுரை வழங்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் லவ் குரு நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், காதலை புதுப்பிக்க சிறப்பு பூஜைகள் நடத்தினால் பலன் கிடைக்கும் என்றும், அதற்கு 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உடனே அப்பெண்ணும் அவரது வங்கி கணக்கிற்கு 10 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

ஆனால் காதலனுடன் சேர்த்துவைக்க எந்த முயற்சியும் எடுக்காததால், மீண்டும் அந்த நபரை அப்பெண் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய நபர், 45 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மிகப்பெரிய பூஜை செய்து காதனுடன் சேர்த்து வைத்துவிடுவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய இளம்பெண் மீண்டும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதேபோல் தொடர்ந்து 2 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால் காதலனுடன் சேர்த்து வைப்பது தொடர்பாக எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாததால், பணத்தை திரும்பத் தரும்படி இளம்பெண் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவித்ததால், இதுகுறித்து காவல் நிலைத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து ஆன்லைன் வெப்சைட்டில் இருந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் நிகில் குமார் (27) என்பதும், அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், இதேபோல் குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காதலை சேர்த்து வைப்பதாக கூறி பல பெண்களிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நிகில் குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #MUMBAI #POLICE #LOVEGURU #WOMAN