‘பைக் பஞ்சர்’.. ‘ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்’.. ‘எரிந்த நிலையில்’ சடலமாக மீட்கப்பட்ட.. ‘பெண் மருத்துவருக்கு’ நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 28, 2019 10:05 PM

ஹைதராபாத்தில் காணாமல் போன கால்நடை மருத்துவர் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telangana Woman Veterinary Doctor Brutally Murdered Body Burnt

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்பவர் கொல்லப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக வேலை செய்துவந்துள்ளார். ஷாம்ஷாபாத் பகுதியில் வசித்துவந்த அவர் தினமும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். வழக்கம்போல நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பும்போது, வழியில் பிரியங்காவின் இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. இதையடுத்து அருகிலிருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் பிரியங்காவிற்கு உதவி செய்ய முன்வர, அதை அவர் தன் குடும்பத்தினருக்கு ஃபோன் செய்து தெரிவித்துள்ளார்.

இரவு 9 மணிக்கு தன் சகோதரிக்கு ஃபோன் செய்த பிரியங்கா, “பைக் பஞ்சர் ஆகிடுச்சு. எனக்கு பதற்றமா இருக்கு. நான் டோல் கேட் கிட்ட தான் இருக்கேன். நீ கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டே இரு” எனக் கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவருடைய ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆக, மீண்டும் அந்த ஃபோன் ஆன் செய்யப்படாமலேயே இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக பிரியங்கா கூறிய இடத்திற்கு சென்று பார்த்த அவருடைய குடும்பத்தினர் அங்கு அவர் இல்லாததால் போலீஸாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ஹைதராபாத் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஷாத்நகர் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவருடைய சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் பிரியங்காவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த அவருடைய சகோதரி சடலமாக கண்டெடுக்கப்பட்டது பிரியங்கா தான் என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள போலீஸார், “பிரியங்காவை அடையாளம் தெரியாத சிலர் காரில் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆனால் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : #CRIME #TELANGANA #MURDER #HYDERABAD #WOMAN #DOCTOR