'பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தி கொலை'...'தமிழகத்தை உலுக்கிய வழக்கு'...உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 28, 2019 09:05 AM

கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு, தனியார் பள்ளியில் படித்து வந்த 10 வயது சிறுமி  மற்றும் 7-வயது சிறுவன் ஆகியோர் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. தமிழகத்தையே இந்த சம்பவம் அதிரச் செய்தது. கடத்தப்பட்ட இருவரும் பொள்ளாச்சி அருகே சடலமாக மீட்கப்பட்டார்கள். பின்னர் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் சிறுமி  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூரம் தெரியவந்தது.

Madras High Court Stays Rape and Murder Accused Manoharan\'s Execution

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவரும், அவரது நண்பன் மனோகரனும் கைது செய்யப்பட்டனர். பள்ளிக்கு கூட்டி சென்ற வாடகை கார் ஓட்டுனரே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது பல பெற்றோர்களை அதிரச்செய்தது. இந்த சம்பவம் நடைபெற்றபோது கோவை மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்தவர் சைலேந்திர பாபு.

அப்போது வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், போலீஸ் காவலிலிருந்து மோகன்ராஜ் தப்பிக்க முயன்றபோது போலிஸார் அவரைச் சுட்டுக் கொன்றனர். பின்னர் மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் 2012 நவம்பர் 1 ம் தேதி மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. 

அந்த தீர்ப்பை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தார், ஆனால் உயர் நீதிமன்றம் மனோகரனின் தண்டனையை கடந்த 2014-ல் உறுதி செய்தது. அதை எதிர்த்து மனோகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. இதனிடையே டிசம்பர் 2 ஆம் தேதி தூக்கிலிட வேண்டும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட நிலையில், கோவை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு என மனோகரன் தரப்பில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதோடு, 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.