காதலுக்கு இடையூறு.. காதலனுடன் சேர்ந்து 'கொலை' செய்து.. போலீசாருக்கும் தகவல் அளித்த மாணவி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 26, 2019 05:16 PM

தங்களது காதலுக்கு இடையூறாக இருந்ததால் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து பெண்ணை கொலை செய்த மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

School Student arrested for Woman murder in Kodaikanal

கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு என்னும் பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரது மனைவி சுந்தரி(31). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக தனியாக வசிக்கிறார். இவர்களுக்கு 11 வயதில் மகள் இருக்கிறார். மகளை கேசவன் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறார்.

இதற்கிடையில் சுந்தரி அதே பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் வேலை பார்த்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர். முருகன் சென்னையில் வேலை பார்ப்பதால் சுந்தரி மட்டும் வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்றுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 22-ம் தேதி சுந்தரி தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது தாயார் போலீசில் புகார் செய்ய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது 21-ம் தேதி இரவு சுந்தரியின் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த ராதா(16) என்னும் மாணவி தங்கியது தெரிய வந்தது.

போலீசார் ராதாவை விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்து இருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது சுந்தரியை கொலை செய்ததை ராதா ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், ''என்னுடன் வகுப்பில் ஒன்றாக படித்த ராஜா என்னும் மாணவனும் நானும் காதலித்தோம். ராஜா என்னை அடிக்கடி வந்து தனிமையில் சந்திப்பது வழக்கம். அதற்காக சுந்தரியின் வீட்டை பயன்படுத்திக் கொண்டோம். சம்பவத்தன்று 3 அடுக்குமாடி கொண்ட சுந்தரியின் 2-வது தளத்தில் நாங்கள் இருவரும் தனிமையில் இருந்தோம். அப்போது அங்கு வந்த சுந்தரி எங்களை பார்த்து கண்டித்தார்.

மேலும் இது குறித்து எங்களது பெற்றோரிடம் கூறப்போவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன நாங்கள் வீட்டைவிட்டு செல்வது போல வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்து அவரது கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்து விட்டோம். ராஜா திண்டுக்கல் சென்று விட்டார். நான் சுந்தரியின் வீட்டில் தங்கி மறுநாள் காலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

தற்போது பள்ளி மாணவி ராதாவை போலீசார் கைதுசெய்து அவரை சிறுவர் மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தற்போது தலைமறைவாக உள்ள ராஜாவை போலீசார் தேடிவருகின்றனர். பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல் இருவரின் எதிர்காலத்தையே சீரழித்து விட்டது.