‘சொத்து சேர்க்கல’... ‘4 பிள்ளைகள் இருந்தும்’... ‘வயதான தாயை’... ‘வீதியில் கொண்டுபோய் விட்ட கொடூரம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 26, 2019 06:04 PM
சொத்து சேர்க்கவில்லை என வயதான தாயை பெற்ற பிள்ளைகளே, நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர், கிழிந்த உடையுடன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர், அவருக்கு போதிய உணவு, உடை கொடுத்து மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சைகளுக்குப் பிறகு அவரிடம் விசாரித்த போது, தன் பெயர் பத்மாவதி என தெரிவித்துள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளதாக கூறினார்.
இந்நிலையில் அவர்கள் தன்னை காரில் அழைத்து வந்து சாலையில் இறக்கிவிட்டு சென்றதாக, அந்த வயதான தாய் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் பத்மாவதியின் மகன் மற்றும் மகள்களிடம் விசாரித்தபோது, தங்களின் தாய் தங்களுக்காக சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை என்றும், அதனால் அவரை பராமரிக்க தயாராக இல்லை எனவும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனமே பத்மாவதியை பராமரிக்க முன்வந்தது.
ஆனாலும் தன் ஆசையெல்லாம் இறுதிக்காலத்தில், தன் மகனுடன் இருக்க வேண்டும் என விருப்பத்துடன் கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்தாலும் பிள்ளைகளின் பெயர்களை சொல்லிச் சொல்லி அவர்களுடன் செல்லவேண்டும் என்று மனதுக்குள் வெம்பிக் கொண்டிருக்கும் அந்த தாயை பார்க்கும்போது கண் கலங்க வைக்கிறது.