உன் தங்கச்சிய 'தூக்கிட்டு' போய் தாலி கட்டுறேன்.. டிக் டாக்கில் சவால்.. இளைஞர் 'கொலையில்' புதிய 'டுவிஸ்ட் '
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Nov 28, 2019 09:19 PM
இரு நாட்களுக்கு முன் நெல்லையில் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் கொலை தொடர்பாக சிறுமி வான்மதியின் அண்ணன் செல்லசாமி (26), உறவினர்கள் செல்லத்துரை (24), முருகன் (25) மற்றும் முத்துப்பாண்டியன், விசுவநாதன் ஆகிய 5 பேரை நேற்று பிடித்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து வான்மதியின் அண்ணன் செல்லசாமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ''மருக்கால் குறிச்சியில் நம்பிராஜன் தனி குரூப்பாகவும், நாங்கள் தனி குரூப்பாகவும் செயல்பட்டு வந்தோம். எங்கள் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் என்னுடைய தங்கை வான்மதி பின்னால் நம்பிராஜன் சுற்றி வருவதாக கேள்விப்பட்டோம். நம்பிராஜனும் அவனது குடும்பத்தினரும் நல்லவர்கள் இல்லை என்பதால் எனது தங்கையை அவனுக்கு கட்டிக்கொடுக்க விரும்பவில்லை. இதை தெரிந்துகொண்ட நம்பிராஜன் என்னுடைய தங்கையை தூக்கிச்சென்று தாலி கட்டுவேன் என சவால் விட்டான். பதிலுக்கு அப்படி நடந்தால் நானும் உன் தலையை எடுத்து விடுவேன் என சவால் விட்டேன்.
சவால் விட்டதுபோல என்னுடைய தங்கையை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டான். இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் சொன்னபடி திருமணம் செய்ததால், நாங்களும் நம்பிராஜனை கொலை செய்ய தேடி வந்தோம். அப்போது நம்பிராஜன் நெல்லையில் பதுங்கி இருந்து குடும்பம் நடத்தியது தெரிய வந்தது. வயல் தெருவிலும் அவன் சண்டியர் போல் வலம் வந்ததால், அங்குள்ளவர்களுக்கு அவனை பிடிக்கவில்லை.
இதனால் எங்களுக்கு தகவல் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து நாங்கள் திட்டமிட்டு அவனை கொலை செய்தோம். ரெயில் விபத்து நடந்தது போல் ஏமாற்றி தப்பிக்க நினைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்,'' என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் ஐவரிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அவர்களை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
நம்பிராஜன் டிக் டாக் வீடியோவில் வான்மதியின் அண்ணன்களுக்கு சவால் விட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சவாலில் ஜெயிக்க பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து அதே சவாலால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் மருக்கால் குறிச்சி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
