‘டிக்டாக்கில்’ பிரபலமான 7 வயது சிறுமியை.. ‘2000 ரூபாய்க்காக’ சித்தி செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 26, 2019 09:37 AM

டிக்டாக்கில் பிரபலமான 7 வயது சிறுமியை அவருடைய சித்தியே 2000 ரூபாய்க்காக கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Andhra TikTok Fame Girl Killed By Stepmother Over Money Issue

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவருடைய மனைவி சத்தியவேணி, மகள் தீப்திஸ்ரீ (7). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சத்தியவேணி இறந்துவிட, சதீஸ்குமார் அதே ஊரைச் சேர்ந்த சாந்தகுமாரி என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், முன்னதாக தீப்திஸ்ரீயை பாசத்துடன் கவனித்துவந்த சாந்தகுமாரி அவரை அடித்து, உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறுமி தீப்திஸ்ரீ சதீஸ்குமாரின் தாய் பேபியிடம் வளர்ந்துவந்துள்ளார். இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை இருந்துவந்ததால், சதீஸ்குமாரால் மகளின் பராமரிப்பு செலவுக்காக பணம் குடுக்க முடியாமல் போயுள்ளது. இதுகுறித்து பேபி கிராம பஞ்சாயத்தில் முறையிட, ஒவ்வொரு மாதமும் சதீஸ்குமார் பேபிக்கு 2000 ரூபாய் கொடுக்க வேண்டும் என அங்கு கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பாட்டி வீட்டில் இருந்த தீப்திஸ்ரீ டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டு அப்பகுதியில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் மாதந்தோறும் பணம் கொடுப்பதை நிறுத்த நினைத்த சாந்தகுமாரி சிறுமியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று தீப்திஸ்ரீயை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள ஏரிக்குச் சென்ற சாந்தகுமாரி, சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின் சிறுமியை சாக்குமூட்டையில் கட்டி ஏரியில் வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதையடுத்து தீப்திஸ்ரீயின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், பள்ளிக்கு அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது சாந்தகுமாரி சிறுமியை தூக்கிக்கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தபோது சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவர் கூறிய தகவலின்படி சாக்குமூட்டையில் கட்டி ஏரியில் வீசப்பட்ட சிறுமி தீப்திஸ்ரீயின் உடலை மீட்டு போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : #CRIME #MONEY #ANDHRAPRADESH #TIKTOK #GIRL #MURDER #FATHER #STEPMOTHER