எங்களுக்கு குடும்பம், 'கொழந்தைங்க' இருக்கு... 'தூக்குத்தண்டனை' குடுக்காதீங்க... நீதிபதியிடம் 'கதறிய' குற்றவாளிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jan 31, 2020 12:08 AM

பழங்குடியின பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூவருக்கும் தூக்குத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Telangana: Three men get death sentence for raping and Murdering

தெலங்கானாவின் லிங்காபூர் மண்டல் என்னும் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. கொல்லப்பட்ட அப்பெண் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதும், சின்ன சின்ன பொருட்களை தெருவில் விற்பனை செய்பவர் என்பதும் அவரின் கணவர் அளித்த புகாரில் இருந்து தெரிய வந்தது.

இதையடுத்து பல்வேறு அமைப்புகளும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என, போராட்டம் நடத்தின. தொடர்ந்து நவம்பர் 27-ம் தேதி ஷேக் பாபு, ஷேக் ஷாபுதீன், ஷேக் மக்தூம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மூவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு கடந்த டிசம்பர் 11-ம் தேதியில் இருந்து நீதிபதி பிரியதர்ஷினி என்பவர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. போலீஸ் தரப்பில் இருந்து 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை கடந்த டிசம்பர் 24-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜனவரி 30-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா ரூபாய் 26 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, மூன்று பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் மூவரும் தங்களுக்கு குடும்பம், குழந்தைகள் இருப்பதாக நீதிபதியிடம் மன்றாடினர். எனினும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பை மாற்றவில்லை. தீர்ப்புக்குப்பின் பேசிய அந்த பெண்ணின் கணவர்,'' இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது. அவர்கள் அம்மாவை கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்து விட்டது என என்னுடைய குழந்தைகளிடம் சொல்வேன். இது சரியான தீர்ப்பு,'' என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Photo Credit: The Hindu