'கர்ப்பிணி மகளின் கண்முன்னே'... 'காதல் கணவர் கொலை'... 'ஜாமீனில் வெளியே வந்த'.. 'குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை'... 'கடிதம் எழுதி வைத்துவிட்டு எடுத்த அதிர்ச்சி முடிவு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 08, 2020 09:40 PM

நாட்டையே உலுக்கிய தெலுங்கானா ஆணவக் கொலையில் கூலிப் படையை ஏவி கர்ப்பிணி மகளின் கண்முன்னே பட்டியலினத்தைச் சேர்ந்த பிரணய் என்ற இளைஞரை வெட்டிக் கொலை செய்த தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Maruthi rao who Commits Suicide in accused of killing Pranay

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடாவில் வசித்து வந்த பிரணய் குமார் என்ற பட்டியலினத்து இளைஞர், அதே ஊரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மாருதிராவ் என்பவரது மகள் அம்ருதவர்ஷிணியை காதலித்தார். இதற்கு அம்ருதவர்ஷிணியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவிக்க வீட்டை விட்டு வெளியேறி, ஹைதராபாத்தில் ஆரிய சமாஜ் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு பிரணயின் குடும்பத்தார் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் ஹைதராபாத்தில் தங்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

கடந்த 2018, செப்டம்பர் 13-ம் தேதி கர்ப்பிணியான தனது மனைவி அம்ருதவர்ஷிணியை ஊருக்கு அழைத்து வந்த பிரணய் குமார், மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது மருத்தவமனை வாசலில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர், பிரணய் குமார் கழுத்து, தலையில் வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடி விட்டார். மனைவி கண்முன்னே துடிதுடித்து கணவர் இறந்ததைக் கண்டு அம்ருதவர்ஷிணி கலங்கிப் போனார்.

இந்தக் கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் ஐந்தே நாட்களில், அம்ருதவர்ஷிணியின் தந்தை மாருதிராவ், அவரது சகோதரர் ஷ்ரவன், சித்தப்பா, கூலிப்படை ஆட்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டியலின இளைஞரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் இருந்த தந்தை மாருதி ராவ், பிரணய் குமாரைக் கொலை செய்ய, ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை அமர்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அவரைக் கைது செய்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்

இதற்கிடையே கடந்த வருடம் ஜனவரி மாதம், அம்ருதவர்ஷிணி ஆண் குழந்தை பெற்றார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், மாருதிராவ் ராவ், அவரது மகன் ஷ்ரவண் உள்ளிட்ட சிலர், ஜாமீனில் வெளியே வந்தனர். அவர் மிரியாலகுடாவில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.  இந்நிலையில் ஹைதராபாத்தில் ஆரிய வைசிய பவன் என்ற விடுதியில் 306-வது அறையில் இருந்து ஞாயிறு காலை துர்நாற்றம் வீசியுள்ளது. விடுதி ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது மாருதிராவ் சடலமாகக் கிடந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவரது உடல் ஒஸ்மனியா மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் துணை கமிஷனர் வேணு கோபால் ரெட்டி தெரிவித்துள்ளார். அவரது உடலுக்கு அருகில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தனது மகள், மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக தனது கணவரின் இறப்புக்கு நீதி கேட்டு அம்ருதவர்ஷிணி பேராராடி வருவது குறிப்பிடத்தக்கது. தந்தை இறந்த தகவலை தெரிந்து கொண்ட அம்ருதா நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது தந்தை இறந்தது குறித்து டிவி செய்தியில் பார்த்து தான் நான் தெரிந்துகொண்டேன். பிரணயின் இறப்புக்குப் பின் தந்தையுடன் எந்தவிடதொடர்பும் இல்லை. மருமகனை கொன்று விட்டோமே என்ற வருத்தத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம். அல்லது வேறு என்ன காரணம் என தெரியவில்லை’ என்றார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.