‘நான் இப்ப எப்படி ஃபீல் பண்றேன்னா’... ‘தனிமைப்படுத்தப்பட்ட’... ‘கொரோனா வைரஸ் பரிசோதனை வார்டில்’... 'யூடியூபரின் நேரடி வீடியோ'!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு அழைத்துச் செல்லப்படும் கேரள யூடியூபர் ஒருவர், தனது அனுபவங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கேரள யூடியூபரான ஷகீர் ஷுபன் என்ற இளைஞர், உலகம் முழுவதும் சைக்கிளில் பயணிக்க எண்ணி கடந்த ஆண்டு அக்டோபரில் பயணத்தை தொடங்கிய ஷகீர், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இரான் உள்ளிட்ட நாடுகளைக் கடந்து அஸர்பைஜானை அடைந்தபோது, கொரோனா பாதிப்பால் அந்த நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருந்தது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர், தனது பயணத்தைப் பாதியில் முடித்துக் கொண்டு, கண்ணூர் திரும்பியிருக்கிறார்.
அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதால், கண்ணூர் விமான நிலையத்தில் இறங்கியதும், கேரள சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தனது பயணம் குறித்துத் தகவல் தெரிவித்து, தாமாகவே முன்வந்து கொரோனா தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு சோதனைக்காக ஷகீர் சென்றிருக்கிறார். மல்லு டிராவலர் (Mallu Traveler) எனும் தனது யூடியூப் சேனலில் ஷகீர், விமான நிலையம் தொடங்கி, மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு வரை தனது அனுபவங்களை செல்ஃபி கேமராவில் வீடியோவாக எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூடியூபில் அப்லோடு செய்திருக்கிறார்.
வீடியோவில் ‘வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் நேரடியாக வீட்டுக்குச் சென்றால், ஒருவேளை அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனால், முதலில் பாதிக்கப்படுவது அவர்களது குடும்பத்தினர்தான். மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து சில நாள்களில் வீடு திரும்பிவிடலாம். ஆனால், அதைக் கண்டு நீங்கள் அஞ்சவேண்டியதில்லை. நாம் கேரளாவில் இருக்கிறோம். நமது சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை உலகமே அங்கீகரித்திருக்கிறது என்பதையும்’ ஷகீர் சுட்டிக்காட்டுகிறார்.
`நான் இப்போது பிரதமருக்கு உண்டான மரியாதையுடன் நடத்தப்படுகிறேன். விமான நிலையத்தில் (கண்ணூர்) இருக்கும் மற்ற பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஏன் சுங்கத் துறை சோதனை கூட இல்லை. அனைவரும் என்னிடத்தில் இருந்து சற்று தொலைவிலேயே நிற்கிறார்கள். என் வாழ்வில் முதல்முறையாக ஒரு விஐபி போல நடத்தப்படுகிறேன். நாம் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்' என்று பாசிடிவ்வாக பகிர்கிறார் ஷகீர். சமூக பொறுப்புடன் தனி மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட இந்த வீடியோவை அனைவரும் காண வேண்டும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
