சமையலறையில் ‘மண்டைஓடு’, மெழுகுவர்த்தி... ‘மாணவி’ மீதான காதலால்... ‘சினிமா’ பாணியில் வீட்டிற்கே சென்று... ‘பேராசிரியர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் கல்லூரி மாணவி ஒருவரை பேராசிரியரே கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். அப்போது அங்கு உதவிப் பேராசிரியராக வேலை செய்துவந்த கிருஷ்ண மோகன் (33) என்பவர் அந்த மாணவியிடம் தான் அவரை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அவருடைய காதலை ஏற்க மறுத்த மாணவி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு சென்று அங்கு தங்கி கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து வந்துள்ளார். அங்கும் விடாமல் துரத்திச் சென்ற கிருஷ்ண மோகன் தன்னைக் காதலிக்கும்படி அந்தப் பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார். தொந்தரவு தாங்க முடியாமல் அந்தப் பெண் நடந்தவை அனைத்தையும் தன் பெற்றோரிடம் கூற, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்தப் பெண்ணை அங்கிருந்து மீண்டும் ஊருக்கே அழைத்துவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பெண்ணின் பெற்றோர் ஒரு திருமணத்திற்காக வெளியில் சென்றிருந்தபோது, அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதை அறிந்த கிருஷ்ண மோகன் புர்கா அணிந்தபடி யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து தான் அணிந்து வந்த புர்காவை அந்தப் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மாட்டிவிட்டு அவரை கடத்திச் சென்றுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அந்தப் பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் வீட்டைச் சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டின் சமையலறையில் எலும்புக் கூடு, மண்டை ஓடு, கடத்தப்பட்ட பெண்ணின் துணி ஆகியவை இருந்துள்ளன. மேலும் கேஸ் சிலிண்டர் திறக்கப்பட்டு, அருகில் மெழுகுவத்தி ஒன்றும் எரிந்துகொண்டிருந்துள்ளது. அதைப் பார்த்து பதறிப்போன போலீசார் உடனடியாக கேஸ் சிலிண்டரை மூடியுள்ளனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அவர்கள், கிருஷ்ண மோகனுடைய செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து அந்தப் பெண்ணை மீட்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நெல்லூரிலும், தமிழகத்தின் வேலூரிலும் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் வேலூர் ரயில் நிலையத்தில் வைத்து கிருஷ்ண மோகனை கைது செய்த போலீசார், அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு கிருஷ்ண மோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்ணைக் கடத்திச் சென்ற கிருஷ்ண மோகன், கேஸ் வெடித்து அவர் விபத்தில் உயிரிழந்தது போல் இருப்பதற்காகவே சமையலறையில் சிலிண்டரை திறந்து வைத்து அருகில் மெழுகுவத்தி மற்றும் எலும்புக் கூடு ஆகியவற்றை செட் செய்துவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
