'லாரியில் இருந்து வந்த துர்நாற்றம்'... 'துரத்திய போலீசார்'...'சாக்கு மூட்டையை' திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரள மாநிலம் பறைசாலையில் இருந்து லாரி ஒன்று மூட்டைகளை ஏற்றி கொண்டு தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது வள்ளியூர் அருகே வரும்போது ரோந்து போலீசார் லாரியை நிறுத்தினார்கள். அப்போது லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து லாரியை சோதனை செய்ய முயன்றபோது, அது நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது.

இதையடுத்து நாங்குநேரி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து புறவழி சாலையில் காத்திருந்த போலீசார் அந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். கேரளாவிலிருந்து வந்த லாரியில் இருந்த மூட்டையைச் சோதனை செய்தபோது, அதில் 10 டன் அளவிற்குக் கோழி இறைச்சி கழிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.
இதற்கிடையே பாதுகாப்பற்ற முறையில் டன் கணக்கில் கோழி கழிவைக் கொண்டு வந்து தமிழக பகுதியில் கொட்டுவதற்குத் திட்டமிட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அபராதம் விதித்த போலீசார், லாரியை மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பினார்கள்.
