‘தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி’.. ‘திரும்பி பார்க்க வைத்த திட்டங்கள்’.. ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Jan 09, 2020 06:13 PM
பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு ‘தாய்மடி’ என்ற புதிய திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு தாய்க்கும் ஆண்டுக்கு 15,000 வழங்கும் ‘தாய் மடி’ (Amma Vodi) என்ற திட்டத்தை இன்று (09.01.2019) ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, குடும்ப வறுமையின் காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர். இதனால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் கொடுத்து கவுரவிக்கும் விதமாக ‘தாய் மடி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 42 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 82 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இதற்காக அரசு 6,456 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க மூன்று புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி 45 ஆயிரம் அரசு பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்துத் தரப்படும். முதல்கட்டமாக 15,715 பள்ளிகள் புனரமைக்கப்பட உள்ளது. இதில் கழிவறை, சுத்தமான குடிநீர், நாற்காலிகள், மின்விசிறி, சுற்றுச்சுவர், தரமான கட்டிடம் , பெயிண்டிங் ஆகிய அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றி அமைக்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் அதே நாளில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஸ்கூல் கிட் வழங்கப்பட உள்ளது. அதில் 3 செட் சீருடை, புத்தகம், ஷூ, பெல்ட், பை ஆகியவை இருக்கும்.
மதிய உணவில் தினமும் ஒரே சாப்பாடு வழங்கினால் அது பிள்ளைகளுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தும். அதனால் ஒவ்வொரு நாளும் ஒரு மெனு வழங்கப்பட உள்ளது. அதில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பருப்பு சாதம், புளியோதரை சாதம், வெஜிடபிள் சாதம், கிச்சிடி, கீரை சாதம், சாம்பார் சாதம், இனிப்பு, வேக வைத்த முட்டை மற்றும் கடலை மிட்டாய் ஆகியவை வழங்கப்பட உள்ளது. சனிக்கிழமை சாப்பாடு, சாம்பார், கூட்டு ஆகியவை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். சங்கராந்தி விடுமுறைக்கு பிறகு பள்ளிகளில் இந்த நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
