சொன்னதை செய்த ‘ஜெகன்’... நிறைவேறியது 'திஷா' சட்டம்... பெண் எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த 'சர்ப்ரைஸ்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Dec 13, 2019 05:36 PM
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு, அதிகப்பட்ச தண்டைனையாக மரண தண்டனை விதிக்கும் ‘திஷா’ சட்டம், ஆந்திர மாநில சட்டப் பேரவையில் வெற்றிக்கரமாக நிறைவேறியது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், பெண் மருத்துவர் (27) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர், தப்பியோட முயற்சித்ததாக, 10 நாட்களுக்குள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பக்கத்து மாநிலமான ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட பலர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திரா சட்டப் பேரவையில் பேசிய ஜெகன், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி, தூக்கு தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதன்படி, 'ஆந்திரப் பிரதேச திஷா சட்டம்' (AP Disha Act) என்ற பெயரிட்டுள்ள இந்தப் புதிய சட்டத்திற்கு அவரது தலைமையிலான ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இதையடுத்து அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட திஷா சட்ட மசோதா, ஒருமனதாக இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி பாலியல் குற்ற வழக்குகளை 14 நாட்களுக்குள் விசாரித்து முடிக்கவும், 21 நாட்களுக்குள் தீர்ப்பளிக்கவும் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து தீர்வு காண, ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்டம் 2019 என்ற சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்ற்கிடையில், ஜெகனின் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.க்களான ரோஜா உள்பட அனைவரும் தாடேப்பள்ளியில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் ஜெகனை சந்தித்தனர். அங்கு அவருக்கு, குங்குமம் இட்டுவிட்டு, இனிப்பு ஊட்டிய பெண் எம்.எல்.ஏ.க்கள், பின்னர் ராக்கி கயிறு கட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
