கொரோனாவுக்கு 'பலியான' முதல் இந்தியர்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்தது அரசு... முழுவிவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 13, 2020 12:18 AM

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸால் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

76 Year Old Karnataka Man died on Coronavirus: Officials

சீனாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் 76 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக கர்நாடகா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கர்நாடகா மாநிலம் கல்பர்கி மாவட்டத்தை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் கடந்த மாதம் பிப்ரவரி 29-ம் தேதி சவுதியில் இருந்து உம்ராவை முடித்து விட்டு இந்தியா திரும்பியுள்ளார். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் அவரை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை.

தொடர்ந்து மார்ச் 5-ம் தேதி உயர் ரத்த அழுத்தம்  மற்றும் ஆஸ்துமா பிரச்சினைகள் காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகளை எடுத்துள்ளனர். 3 நாட்கள் கழித்து அவர் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து அன்றிரவு 10.30 மணியளவில் அவர் இறந்து விட்டார். அவர் கொரோனா வைரஸால் இறந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதுகுறித்து அரசுத்தரப்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சற்றுமுன் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, '' கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் காலமானார். அவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது உறுதியாகியுள்ளது,'' என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இறந்த முதியவரின் ரத்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது உறுதியாகியுள்ளது.