‘கொரோனா பாதித்த என்ஜினீயருடன்’... ‘தொடர்பில் இருந்த 36 பேருக்கு நோய் தொற்று அறிகுறி’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 04, 2020 03:22 PM

ஹைதராபாத்தில் கொரோனா பாதித்த என்ஜீனியருடன் தொடர்பிலிருந்த 36 பேருக்கும் கொரானா வைரஸ்-க்கான சில அறிகுறிகள் இருப்பதால் தனிமை வார்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

36 people in contact with Hyderabad Techie show symptoms

தெலுங்கானா மாநிலம் மகேந்திர ஹில்ஸ் அருகில் வசித்து வரும் 24 வயதான என்ஜீனியர் ஒருவர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 15-ம் தேதி அலுவலக மீட்டிங்கிற்காக துபாய்க்கு சென்ற அவர், அங்கு ஹாங் காங்கில் இருந்து வந்த என்ஜீனியர்களை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் 20-ம் தேதி பெங்களூரு திரும்பி வந்தார். 2 நாட்கள் அங்கு பணியாற்றிய அவர், பேருந்து மூலம் ஹைதராபாத்துக்கு வந்தார்.

அங்கு கடந்த திங்கள்கிழமை உடல்நிலை பாதிக்கப்படவே, பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மூலம் வேறு யாருக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து துபாயில் இருந்து திரும்பிய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்ஜீனியருடன், அலுவலகம், குடும்பம், வாடகை அறை விடுதி, விமானம் மற்றும் பேருந்தில் பயணித்தவர்கள் உள்பட தொடர்பில் இருந்த 88 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஹைதராபாத் என்ஜீனியருடன் விமானம், பேருந்தில் பயணித்தவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 36 பேருக்கு கொரோனா வைரஸுக்கான சில அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து 36 பேரும் தனிமை வார்டில் வைத்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் பரிசோதைனக்குப் பின்னரே உறுதியாக தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைரஸ் அறிகுறி இல்லாதோர் தொடர்ந்து அவர்களது வீடுகளிலேயே வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 14 நாட்கள் வரை வெளியே செல்ல வேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் 24 பேர் வீட்டிலிருந்து பணி செய்யுமாறும் ஐடி நிறுவனம் கூறியுள்ளது.

Tags : #BENGALURU #TECHIE #APOLLOHOSPITAL #HOSPITAL #HYDERAPAD #SECUNDERABAD