‘ரூ 27 கோடி’ பணம்... ‘3 கிலோ’ தங்கம்... ‘இத’ பண்ணுங்க ‘எல்லாமே’ சரியாகிடும்... கணவரை இழந்த பெண்ணிடம்... ‘கைவரிசையை’ காட்டிய நபர்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 26, 2020 02:15 PM

பெங்களூருவில் கணவரை இழந்த பெண்ணிடம் குடும்ப பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி கோடிகளில் மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Bengaluru Fake Saint Arrested For Cheating Woman

பெங்களூரு ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் கீதா. இவர் போலீசாரிடம் அளித்துள்ள புகாரில், “என்னுடைய கணவர் உடல்நலக்குறைவால் கடந்த 2009ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன்பிறகு நான் என்னுடைய 3 மகன்களுடன் ராமமூர்த்தி நகரில் தனியாக வசித்து வருகிறேன். பெங்களூருவில் எனக்கு 7 இடங்களில் சொந்தமாக நிலமும், கோலாரில் ஒரு தோட்டமும் இருந்தது. இந்நிலையில் எனக்கும் என்னுடைய உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது.

அந்த சமயத்தில் எனக்கு அறிமுகமான நாகராஜ் என்பவர், தான் ஒரு சாமியார் எனவும், என்னுடைய குடும்ப பிரச்சனைகள் அனைத்தையும் நான் அறிவேன் எனவும் கூறினார். மேலும் அதைத் தீர்த்துவைக்க என்னுடைய வீட்டில் பூஜை ஒன்று நடத்த வேண்டும், அதில் வீட்டில் உள்ள தங்க நகைகளை வைக்க வேண்டும் எனவும் கூறினார். பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பல பூஜைகளை நடத்தியவர் அதில் நான் வைத்த நகைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டார். இதுவரை பூஜைக்காக வைத்த 3 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டவர், பூஜை செலவுக்காக என்னிடம் இருந்து ரூ 5 கோடி பணத்தையும் வாங்கியுள்ளார்.

இதையடுத்து எனக்கு சொந்தமான நிலங்களையெல்லாம் விற்றுவிட்டு வேறு புதிய இடத்தில் நிலம் வாங்கினால் குடும்ப பிரச்சனை தீரும் என அவர் கூறியதை நம்பி நானும் பெங்களூருவில் உள்ள நிலங்களை விற்று ரூ 22 கோடி பணத்தை அவரிடம் கொடுத்தேன். அப்போதும் பிரச்சனை எதுவும் தீராததால் கொடுத்த பணம், நகைகளை திருப்பிக் கொடுக்கும்படி நாகராஜிடம் கேட்டேன். ஆனால் பணம், நகைகளை திருப்பித் தர மறுத்த அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு என் மகன்கள் மீது பேய்களை ஏவிவிட்டு விடுவேன் எனவும் மிரட்டுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி சாமியார் நாகராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #BENGALURU #MONEY #WOMAN #HUSBAND #SAINT #GOLD