VIDEO: 'நீங்க எடுத்திருக்கலாம்ல' ஏன் நீங்க எடுத்திருக்கலாம்ல?... மாறிமாறி 'திட்டிக்கொண்ட' வீரர்கள்... இப்டியே வெளையாடுங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 02, 2020 11:32 PM

ரஞ்சி தொடரில் தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெங்கால் அணிக்கு எதிராக கர்நாடக அணி விளையாடி வருகிறது.

Ranji Trophy: Karnataka players worst fielding goes viral

முதல் இன்னிங்சில் பெங்கால் அணி 312 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கர்நாடகா அணி சார்பில் மிதுன், மோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் கர்நாடக அணி தன்னுடைய முதல் இன்னிங்சை தொடங்கியது. கருண் நாயர், மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுல் என முன்னணி பேட்ஸ்மேன்கள் இருந்தும் பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேல் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் கர்நாடக அணி 122 ரன்னில் சுருண்டது. பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அதிரடி காட்டினார். தொடர்ந்து 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் அணி தன்னுடைய 2-வது இன்னிங்சை தொடங்கியது.

கர்நாடக அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 161 ரன்களுக்கு சுருண்டது. எனினும் அந்த அணி 351 ரன்கள் எடுத்திருந்ததால் கர்நாடக அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  இதையடுத்து களமிறங்கிய கர்நாடக அணி 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில் அந்த அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 254 ரன்கள் எடுக்க வேண்டியது இருக்கிறது. இலக்கை எட்டி அரையிறுதியில் கர்நாடக அணி வெற்றி பெறுமா? என்பது நாளை தான் தெரியவரும். இதனால் இந்த போட்டியின்மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்காக எகிறியுள்ளது.

இதற்கிடையில் போட்டியின்போது கர்நாடக வீரர்களின் பீல்டிங் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. 8-வது ஓவரின் 4-வது பந்தை கர்நாடக வீரர் பிரசித் கிருஷ்ணா வீசினார். பெங்கால் அணியின் சுதீப் சட்டர்ஜி அந்த பந்தை எதிர்கொண்டு லேசாக தட்டிவிட்டார். பந்து பவுண்டரி லைனை நோக்கி வேகமாக ஓடியது. இதைப்பார்த்த கிருஷ்ணப்பா கவுதம், ஜெகதீசா சுச்சித் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். எப்படியும் இருவரில் ஒருவர் பந்தை தடுத்து விடுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இருவருமே பந்தை தடுக்கவில்லை. இதனால் எளிதாக அந்த பந்து பவுண்டரி லைனை தாண்டிச்சென்றது. கடைசியில் பவுண்டரி லைனில் இருந்த ஒருவர் அந்த பந்தை எடுத்து மைதானத்துக்குள் வீசினார். இதைவிட மோசம் என்னவென்றால் இருவருமே பந்தை விட்டுவிட்டு, மாறிமாறி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டது தான். இந்த வீடியோ தற்போது வைரலாக இதைப்பார்த்த ரசிகர்கள் நல்லா பண்றீங்க என்று கிண்டலடித்து வருகின்றனர்.