‘நா என்ன குவிண்டால் வெயிட்டா?’.. கட்சித் தொண்டர்களிடையே கலகலப்பூட்டிய பிரியங்கா காந்தி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Mar 28, 2019 08:07 PM
ராகுல் காந்தியின் சகோதரியும் உத்தர பிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்.

அவரை வரவேற்க ஆங்காங்கே காங்கிரஸ் தொண்டர் கூட்டம் காத்திருந்த நிலையில் பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் இருந்து சோனியா காந்தியின் தொகுதியான ரபேரலிக்குச் சென்றார்.
இடையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வுக்கு பிரியங்கா காந்தி சென்றிருந்தார். அங்கு பிரியங்கா காந்தியின் எடைக்கு எடை தராசில் லட்டு வைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பிரியங்கா காந்தி அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புன்னகையுடன் மறுத்துவிட்டார்.
தொடர்ந்து கட்சி தொண்டர்கள் அவரை வலியுறுத்தியபோது, ‘நான் குவிண்டால் எடை இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?’ என கேள்வி எழுப்பினார் இதனால் கூட்டத்தில் பெரும் சிரிப்பலையும் ஏற்பட்டது. பின்னர் தொண்டர்களின் உற்சாகத்தை அங்கீகரித்த படி புன்முறுவலோடு ஒருவழியாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிர்வாகியை தராசில் அமரவைத்தார் பிரியங்கா காந்தி.
பிரியங்கா காந்தி கேட்ட இந்த கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் உத்தரப்பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி அங்கு பைசாபாத் பகுதியிலுள்ள அயோத்தியில் பிரச்சாரம் செய்ய உள்ளதோடு அங்குள்ள ஹனுமான் காதி கோவிலுக்கு செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
