சேப்பாக்கத்தில் தோனியைத் துரத்திய தமிழ் ரசிகரிடம் போலீஸ் விசாரணை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 19, 2019 04:43 PM

ஐபிஎல் தொடங்கவுள்ளதை அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் பயிற்சி எடுத்து வருவதைக் காண கூட்டம் அலைமோதி வருகிறது.

viral TN fan of MS Dhoni inquired by police for breaking the rules

இங்கு இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான தல தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக, ஐபிஎல் போட்டிக்காக தயாராகும் முனைப்பில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தார். வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் விளையாடவுள்ள நிலையில், இங்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த தல தோனி உள்ளிட்ட வீரர்களை கண்டு ரசிக்க, சி,டி மற்றும் இ உள்ளிட்ட கேலரிகளில் இலவசமான இருக்கைகள் தரப்பட்டதால் ரசிகர்கள் குவிந்தனர்.

அப்போது இரவு 9 மணி அளவில், ரசிகர் கூட்டத்துக்குள் இருந்து ஒரு ரசிகர், பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனியை நோக்கி ஓடிவர, அதைப் பார்த்த தோனி, வழக்கம் போல நிற்காமல், ‘முடிஞ்சா என்ன புடி’ என்பது போல் ஓடிப்பிடித்து விளையாடினார். இறுதியில் தல தோனியிடம் அந்த ரசிகர் கை குலுக்கினார். ஆனால் அந்த ரசிகர் உடனடியாக மைதானத்தில் இருந்து (அத்துமீறி நுழைந்ததால்) வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அந்த ரசிகரிடம் திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் மதுரை மாவட்டம் மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும், மதுரையில் இருந்து கிரிக்கெட் வீரர்களைக் காணவே விரைவு ரயில் மூலம் சென்னை வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் தோனியை பார்த்த சந்தோஷத்தில் செய்வதறியாது உணர்ச்சிவசப்பட்டு மைதானத்துக்குள் பாதுகாப்பு உத்தரவுகளை மீறி ஓடியதாக பதில் அளித்துள்ளார். எனினும் அவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. தோனியை பொருத்தவரை, அவருக்கு இப்படி நடப்பது 16-வது முறை என்பது குறிப்பிடப்படுகிறது.

Tags : #MSDHONI #FAN #VIRAL #POLICE