‘டங்க் ஸ்லிப்பாகி’ கனிமொழிக்கு ஓட்டு கேட்க முனைந்த அதிமுக வேட்பாளர்.. சிரித்து களைத்த தொண்டர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 21, 2019 12:35 PM
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீட்டு விபரங்களை அறிவித்து திமுக- அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த இடைத் தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதிதான், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் தொகுதி. இந்த சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் வேட்பாளராக அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டிருப்பவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்.
அதிமுகவின் சார்பில், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சின்னப்பன், இந்த விளாத்திகுளம் தொகுதிக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே திரளான அதிமுக தொண்டர்களின் மத்தியில் எழுச்சியுரை ஆற்றிய சின்னப்பன் கொஞ்ச நேரத்தில் டங்க் ஸ்லிப்பாகி சொன்ன வார்த்தை வைரலாகியதால் கூடியிருந்த பொதுமக்கள் வெடித்து சிரித்தே விட்டனர்.
அதன்படி அவர் பேசியவை அப்படியே:
‘நம்முடைய கட்சியின் வேட்பாளராக, நம்முடைய புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ஆசியோடு, நம் கூட்டணிக் கட்சி வேட்பாளராக, நரேந்திர... இந்திய பாரத பிரத.. பிரதமராக இருந்து இந்த பாரத திருநாட்டை ஒரு காவலராக இருந்து கட்டிக் காக்கின்ற நரேந்திர மோடி அவர்களின் ஆசியோடு அன்பிற்கினிய சகோதரி கனிமொழி.. (கூட்டத்தின் நடுவில் சலசலப்பும் சிரிப்பும் ஒலிக்கிறது.. அதிமுக வேட்பாளர் சின்னப்பனும் சிரிக்கிறார்.. பின்னர் சுதாரித்துக்கொண்டு) அன்பிற்கினிய சகோதரி தமிழிசை சௌந்தர்ரஜன் அவர்களுக்கு அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’.
இவ்வாறு அதிமுகவில் இருந்துகொண்டு சின்னப்பன் வாக்கு சேகரிக்கும்போது தமிழிசையின் பெயருக்கு பதில், திமுகவைச் சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்க முனைவது போல், கனிமொழியின் பெயரை உச்சரித்ததால் அப்பகுதியில் பரபரப்பு உண்டாகியது.
