பலி 'விலங்கு ' வருகிறது... 45 நிமிட ஆடியோ... உலகை 'உலுக்கிய' மரணத்தில்... 5 பேருக்கு தூக்குத்தண்டனை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Dec 23, 2019 11:50 PM

சவுதி அரசரையும்,இளவரசர் முகமது பின் சுல்தானையும் தொடர்ந்து விமர்சனம் செய்து எழுதிவந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி விவாகரத்து தொடர்பான ஆவணங்களைப் பெற,சவுதி தூதரகத்துக்குள் சென்றார்.துருக்கியில் உள்ள தனது காதலியை திருமணம் செய்யும் பொருட்டு அவர் துருக்கி நாட்டில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றார்.மீண்டும் அக்டோபர் 2-ம் தேதி வருமாறு அவரிடம் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Saudi sentences five to death, three to jail in Jamal Khashoggi case

தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி சவுதி தூதரகத்துக்குள் சென்ற ஜமால் அதற்குப்பின் மீண்டும் வெளியில் வரவில்லை.இது உலக அரங்கில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சவுதிக்கு, அமெரிக்கா பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. இதைத்தொடர்ந்து ஜமால் கொலை செய்யப்பட்டதாக துருக்கி அரசு செய்தி வெளியிட,சவுதி அரசு அதனை ஒப்புக்கொண்டது.ரியாத்தில் இருந்து 15 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் ஒன்று இஸ்தான்புல்லுக்கு சென்று அவரைத் துண்டு,துண்டாக வெட்டிக் கொலை செய்த உண்மையும் வெளியாகி உலக அரங்கை அதிர வைத்தது.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகளைத் தப்ப விடமாட்டோம் என, துருக்கி அதிபர் எண்டோகன் தெரிவித்தார்.இந்த கொலை விவகாரத்தில் சவுதி இளவரசரை அமெரிக்கா நேரடியாகவே குற்றம் சாட்டியது.மேலும் `ஜமால் கொலையில் ஈடுபட்ட 18 முதல் 21 பேருக்கு அமெரிக்க விசா இனி வழங்கப்படமாட்டாது' என்று அதிபர்  டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.

ஐ.நா விசாரணை உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஜமால் கசோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில்தான் கொல்லப்பட்டார் என்பதை சவுதி அரசு ஒப்புக்கொண்டது. தூதரக அதிகாரிகளுக்கும் கசோகிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்ததாக விளக்கம் சொல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் நீண்டநாள்களாக மௌனம் காத்து வந்த சவுதி இளவரசர் சல்மான், துருக்கியின் குற்றச்சாட்டை மறுத்ததோடு கஷோகி கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் பத்திரிகையாளர் கசோகி மரணம் தொடர்பாக 5 பேருக்கு தூக்குத்தண்டனையும், 3 பேருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

கசோகி மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான 45 நிமிடங்கள் அடங்கிய ஆடியோ ஒன்றை துருக்கி அரசு சமர்ப்பித்தது. அதில் கசோகி தூதரகத்துக்குள் செல்லும்போது பலி கொடுக்கப்படும் விலங்கு வருகிறது' என்றும் எனக்கு ஊசி போடப்போகிறீர்களா? என்று கசோகி கேட்பதும் இருந்தது. மேலும் உடல் மற்றும் இடுப்புப்பகுதி இந்த  பைக்குள் நுழையாது என்ற பேச்சுக்குரல்களும் இருந்தன.

தொடர்ந்து சவுதி அமைச்சரவையில் உயர்மட்ட பதவியில் இருக்கும் 11 பேர் ஜமால் கஷோகி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு சிறைத் தண்டனையும் விதித்து சவுதி அரசு உத்தரவிட்டுள்ளதாக சவுதி அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Tags : #MURDER