சிறுமி கொலையில் 'புதிய' டுவிஸ்ட்... திருமணத்திற்கு வற்புறுத்தினார்... 'கொலை' செய்தேன்... ஆட்டோ டிரைவர் கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 21, 2019 03:21 PM

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொலை செய்தேன் என வேலூர் சிறுமி கொலையில் ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Vellore Girl Murder case; Police arrested two persons

கடந்த 18-ம் தேதி வேலூர் கல்குவாரியில் அடையாளம் தெரியாத சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கையில் குத்தப்பட்டு இருந்த டாட்டூவை வைத்து அவரை அடையாளம் கண்டுபிடித்த போலீசார், கடைசியாக வந்த போன்கால் அடிப்படையில் சிறுமியின் காதலன் பிரகாஷ்(25) என்பவரைக் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் அரியூர் குப்பத்தை சேர்ந்த சரவணன் என்பவரது 17 வயது மகள் வேலூர் சி.எம்.சி கேண்டீனில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி வேலை முடிந்து சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது கல்குவாரியில் சிறுமியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் கையில் இருந்த டாட்டூவை வைத்து அவர் தான் காணாமல் போன சிறுமி என்பதை போலீசார் அவரது பெற்றோர் மூலம் உறுதிப்படுத்தினர். தொடர்ந்து இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் கொலைக்கு காரணமான ஆட்டோ டிரைவர் பிரகாஷை கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரித்தபோது, ''நாங்கள் இருவரும் கடந்த 2 மாதங்களாக காதலித்து வந்தோம். திடீரென அவர் திருமணத்திற்கு வற்புறுத்தினார். என்னைத்தவிர வேறு சில ஆண்களுடனும் அவருக்கு தொடர்பு இருந்ததால் அவரை திருமணம் செய்ய நான் மறுத்தேன். சம்பவ தினத்தன்று இருவரும் புதுவசூர் மலைக்கு சென்றோம். அங்கு எங்கள் இருவருக்கும் திருமணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரத்தில் அவரை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்து விட்டேன். கல் குவாரியில் விழுந்து அவர் அங்கேயே இறந்து போனார். கொலையை மறைக்க திட்டமிட்டு, என்னுடைய உறவினர் நவீன்(23) என்பவரை அழைத்தேன். அவர் ஆட்டோ எடுத்துக்கொண்டு வந்தார். சிறுமியின் பேக், மொபைல் ஆகியவற்றை திட்டமிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினோம்.

பின்னர் நான் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டேன். சிறுமியின் சடலம் கிடைப்பதற்கு முன்தினம் காவல்துறையினர் எனக்கு போன் செய்து நீதான் கடைசியாக கால் செய்து பேசி இருக்கிறாய். விசாரணைக்கு  வா என கூப்பிட்டனர். ஆனால் நான் போகவில்லை. கடைசியில் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்,'' என்று தெரிவித்துள்ளார்.

கொலைக்கு உடந்தையாக இருந்தாக கூறி  நவீனையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு முன் சிறுமி பாலியல் வன்கொடுமை எதுவும் செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.