'பொங்கலுக்கு தடா அருவி'...'மனைவிக்கு வந்த போன் கால்'... சென்னை இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தடா அருவிக்கு சுற்றலா சென்ற சென்னை இளைஞர்களின் கார், டிவைடரில் மோதி நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் யுகேஷ்குமார். இவர் அயனாவரத்தில் கோழி கறி கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி நிரேஷா என்ற மனைவியும், 9 வயதில் மகனும் உள்ளனர். இவருடைய நெருங்கிய நண்பர் பிபின். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இதனிடையே இருவரின் நண்பர்களான கொளத்தூரை சேர்ந்த யுவராஜ் மற்றும் மாதவரம் அடுத்த வினாயகபுரத்தை சேர்ந்த சித்திக், ஆகிய 4 பேரும் பொங்கல் விடுமுறையை கொண்டாட ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள வரதையாபாளையம் அருவிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட நிலையில் காரை பிபின் ஓட்டிச்சென்றார். முன் இருக்கையில் யுகேஷ் குமாரும் மற்ற இருவரும் பின் இருக்கையிலும் அமர்ந்து பயணம் செய்தனர். நண்பர்கள் சென்ற கார் நேற்று அதிகாலை, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கோரிமேடு என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இந்த கோர விபத்தில் காரை ஓட்டிச்சென்ற பிபின் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த யுகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சித்திக் மற்றும் யுவராஜ் இருவரும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே விபத்து குறித்து யுகேஷ் குமாரின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நண்பர்களோடு சுற்றலா சென்ற நிலையில், கணவனின் திடீர் மரணம் அவரை நிலைகுலைய செய்தது. இதனிடையே இந்த கோர விபத்தால் நேற்று அதிகாலை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
