‘சென்னையை’ அதிர வைத்த காற்று மாசு... மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரித்தும்... பனி மூட்டத்துடன் கலந்த ‘நச்சு’... கடுமையான ‘புகை’ மூட்டம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 14, 2020 11:24 AM

சென்னையில் பனி மூட்டத்துடன் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Chennai Air Pollution increased Due to Bhogi Pongal Festival

தை மாதத்தை வரவேற்கும் பொருட்டு, மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடுவது மரபு. அப்போது, பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற சொல்லுக்கு ஏற்ப, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் பழைய பாய், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துவது வழக்கம். அந்த வகையில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதலே, வீட்டில் உள்ள பழையப் பொருட்களை எரித்து, மேளதாளம் அடித்து பனியை போக்கும் வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில், தற்போதைய சூழலில் போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் , ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரிப்பதினால் நச்சு மிகுந்த ரசாயன வாயு அதிலிருந்து வெளியேறி, காற்று மாசு அதிகரிக்கும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்திருந்தது. ஆனால் அதையும் மீறி, எரிக்கப்பட்ட பொருட்களால், இன்று சென்னை நகரம் முழுவதும் பனி மூட்டத்துடன் நச்சு கலந்ததால், காற்று மாசு அதிகரித்து,எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு சிரமம் உண்டாகியது. குறிப்பாக, சென்னை கத்திப்பாரா, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, மணலி, ஆலந்தூர், வட சென்னை உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

50-லிருந்து 100 குறியீடுக்குள் இருந்தால் மட்டும் அது சுவாசிக்க ஏதுவான காற்றாக பார்க்கப்படும் நிலையில், மணலியில் 795 குறியீடுகளாகவும், அண்ணாசாலையில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தில் 272 குறியீடுகளாகவும், ஆலந்தூரில் 161 குறியீடுகளாகவும், குறைந்த பட்சமாக வேளச்சேரியில் 100 ஆகவும் காற்று மாசு பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் முற்றிலும் சுவாசிக்க ஏதுவான காற்று இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இந்தக் காற்றால் பல உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக நுரையீரல் சம்பந்தமான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. போகிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில்15 இடங்களில் காற்று தரசோதனை கருவிகளை மாசுக் கட்டுப்பாடு வாரியம் அமைத்திருந்தது.

Tags : #AIR #POLLUTION #CHENNAI #TANILNADU #FESTIVAL #PONGAL