பிறந்த போது வெறும் '340 கிராம்' தான் எடை... உயிருடன் இருக்க வெறும் '5 சதவீதம்' மட்டுமே வாய்ப்பு... காலனை வென்ற 'இளம் போராளி'...
முகப்பு > செய்திகள் > கதைகள்பிரிட்டனில் 6 மாத குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்று 2 அறுவை சிகிச்சைகளைக் கடந்து இன்று ஆரோக்கியமாக உயிர்வாழும் நிகழ்வு மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரியான் எவன்ஸ் - கிம் பிரவுன் என்ற தம்பதியர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். 2018-ம் ஆண்டின் இறுதியில் பிரவுன் கருத்தரித்துள்ளார். கர்ப்பப் பரிசோதனையில் அவருக்கு "ப்ரீ-எக்லம்ப்ஸியா" என்ற குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. "ப்ரீ-எக்லம்ப்ஸியா" என்பது பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம் சார்ந்த நோயாகும். இது தாய்-சேய் இருவரையும் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.
மருத்துவர்கள் கூறியது போலவே, பிரவுனின் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டது. இதயத் துடிப்பும் குறையத் தொடங்கியிருக்கிறது. `இனி வயிற்றில் குழந்தை உயிருடன் இருந்தாலும் வளர வாய்ப்பில்லை' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வயிற்றில் உள்ள குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்க பிரவுனின் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
சரியாக 6-வது மாதத்தில் அவரின் வயிற்றில் இருந்த 340 கிராம் மட்டுமே எடையுள்ள பெண் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்துள்ளனர். ஆனால் அந்தக் குழந்தை பிழைப்பதற்கு ஐந்து சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிறந்து மூன்றே வாரங்களில் மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் குடலில் ஒரு துளை இருப்பதைக் கண்டுபிடித்தனர். மூன்று மாதங்களில் இரண்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் அதன் கண்களில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இத்தனை சோதனைகளுக்குப் பிறகும் அந்த குழந்தை உயிர் பிழைத்து தற்போது 5 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.
அந்த குழந்தைக்கு அவளது பெற்றோர் இசபெல்லா என பெயர்சூட்டியுள்ளனர். இளம் வயதிலேயே இசபெல்லா ஒரு போராளி என அவளது பெற்றோர் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.
