'புகார் தந்தா, என் அம்மா திரும்பி வருவாங்களா?'.. லத்தியை வீசி எறிந்த போலீஸார்.. கணப்பொழுதில் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 11, 2019 07:34 PM

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்து உலகங்காத்தான் என்கிற ஊரைச் சேர்ந்த அய்யம்பெருமாள் என்பவரின் மகன் செந்தில், தனது தாய் அய்யம்மாளுடன், கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்துள்ளார்.

villupuram police throws lathi, bikers mother dead in spot

அப்போது கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வாகன தணிக்கையில் இருந்த சிறப்பு பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான காவலர்கள் இளையராஜா, சந்தோஷ், செல்வம் உள்ளிட்டோர் செந்திலை கவனித்துள்ளனர். செந்தில் ஹெல்மெட் போடவில்லை என்பதால், அவரை நிறுத்தியுள்ளனர்.

ஆனால் ஹெல்மெட் போடாததால் செந்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகத் தெரிகிறது. உடனே காவலர்கள் செந்திலின் வாகனத்தை நோக்கி லத்தியை வீசியெறிந்ததில், செந்திலின் வாகனம் நிலை தடுமாறி சறுக்கி விழுந்தது. இதில் அய்யம்மாள் படுகாயமடைந்ததை அடுத்து மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்களும், உறவினர்களும் காவலர்களை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டிஎஸ்பி, காவலர்கள் மீது புகார்கள் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம், என்று சொல்லி கூட்டத்தை கலைக்க முயற்சித்தார். ஆனால் செந்திலோ, தான் புகார் கொடுத்தால் தன் அம்மா திரும்ப கிடைப்பாரா? என்று கேட்டு கண்கலங்கினார்.

இதனிடையே அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சிறப்பு பயிற்சி உதவி ஆய்வாளரையும் அவரது தலைமையிலான காவலர்களையும் ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

Tags : #VILLUPURAM #POLICE #HELMET