‘காட்டுக்குள் சடலமாக கிடந்த மாணவி’!.. ‘வாய், கால்கள் துணியால் கட்டி நடந்த கொடூரம்’.. வெளியான பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Jan 04, 2020 04:37 PM
திருச்சி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்துள்ள வடக்குநாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியை காணவில்லை என, கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் மாணவியின் காலணி கிடந்ததை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார்.
உடனே இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு தேடியபோது புதருக்குள் மாணவி வாய், கால்கள் துணியால் கட்டப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து மாணவி கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதிக்குமார் என்ற இளைஞரும், மாணவியும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், மாணவி வேறொருவருடன் பழகி வந்ததை மதிக்குமார் கண்டித்துள்ளார். ஆனால் இதை மாணவி கேட்காததால், காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.