‘பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி’!.. ‘பாதி வழியில் வயலுக்குள் நடந்த பிரசவம்’.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 04, 2020 03:11 PM

ஆம்பூர் அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு வயலில் பெண்கள் பிரசவம் பார்த்தனர்.

Ambur pregnant woman birth baby in farming land

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (25). இவரது மனைவி சோனியா (22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக சோனியா கர்ப்பம் தரித்துள்ளார். நேற்று காலை அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே சோனியாவின் மாமியார், தன் உறவினரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சோனியாவுக்கு பிரசவ வலி அதிகமாகியுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்களை அழைத்துள்ளனர். உடனே அவர்கள் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு, சோனியாவை பத்திரமாக வயல்வெளிக்கு அழைத்து வந்துள்ளனர்.

பின்னர் சோனியாவை சுற்றிலும் சேலையை தடுப்பாக கட்டி பிரசவம் பார்த்துள்ளனர். அதில் அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சோனியாவையும், குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வயல்வெளியில் பிரசவம் பார்த்த அப்பகுதி பெண்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Tags : #PREGNANCY #AMBUR #PREGNANT #FARMINGLAND