‘தூக்க மாத்திரை லட்டு’!.. ‘பஸ்ல தனியா வரவங்கதான் டார்கெட்’!.. பயணிகளை பதறவைத்த பெண்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Jan 02, 2020 05:03 PM
பேருந்து பயணிகளிடம் பேச்சு கொடுத்து அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகளிடமிருந்து அடிக்கடி மர்ம கும்பல் கொள்ளை அடித்து வண்ணம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி திருச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு நிதின் முரளி என்பவர் 1 கிலோ தங்க நகையுடன் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது சமயபுரம் அருகே 8 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் ஏறியுள்ளது.
அதில் பெண் ஒருவர் நிதின் முரளியின் அருகில் அமர்ந்துள்ளார். பின்னர் அவரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு தங்கத்தை கொள்ளையடித்துவிட்டு அக்கும்பல் தப்பியுள்ளது. மயங்கி கிடந்த நிதின் முரளி கண் விழித்தபோது நடந்த விபரீதம் தெரியவந்துள்ளது. இதுபோன்று இப்பகுதியில் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்வதற்காக கோவை பேருந்தில் பார்வதி என்ற பெண் ஏறியுள்ளார். அப்போது அவரின் அருகில் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். பின்னர் பார்வதியிடம் நைசாக பேச்சு கொடுக்க ஆரம்பித்துள்ளார். சிறிது நேரத்தில் பார்வதிக்கு லட்டு ஒன்றை சாப்பிட கொடுத்துள்ளார். இதை சாப்பிட்டதும் பார்வதி மயங்கமடைந்துள்ளார். அந்த சமயம் பார்வதியிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.
இந்நிலையில் பேருந்தில் மயங்கி கிடந்த பார்வதியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து நகை கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் பார்வதி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு பார்வதி வந்துள்ளார். அப்போது பேருந்தில் தன்னிடம் நகையை கொள்ளையடித்த பெண்ணை அங்கு பார்த்துள்ளார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அப்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராணி என்பது தெரியவந்துள்ளது. மேலும் மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து பயணிகளிடம் நகைகளை திருடியதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘குடும்ப சூல்நிலை காரணமாக இந்த தொழிலை ஈடுபட ஆரம்பித்தேன். சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தேன். எனக்கு லட்டு செய்ய தெரியும். மருந்துகடைகளில் தூக்க மாத்திரை வாங்கி நன்றாக பொடி செய்து லட்டுகளின் நடுவில் வைத்து விடுவேன். பேருந்துகளில் தனியாக அமர்ந்துருக்கும் பெண்கள்தான் டார்கெட். அவர்களிடம் பேச்சு கொடுத்து லட்டு சாப்பிட கொடுப்பேன். அவர்கள் மயங்கியதும் நகைகளை கழற்றிக்கொண்டு இறங்கி விடுவேன்’ என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராணியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.