'1 கோடி லிட்டருப்பு'.. இனியாச்சும் தீருமா? சென்னையின் தண்ணீர் தேவை? தொடங்கிய குடிநீர் ரயில் சேவை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jul 12, 2019 02:21 PM
தமிழக முதல்வரின் குடிநீர் திட்ட ஆணைப்படி, வேலூர் மாவட்டம், ஜோலார்ப் பேட்டையின் மேட்டுசக்கரக் குப்பத்தில் இருந்து பார்சரம் பேட்டை வழியாக ஜோலார்ப் பேட்டைக்குக் கொண்டுவரப்படும் குடிநீர், அங்கிருந்து நாள் தோறும் 1 கோடி லிட்டராக சென்னைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக ஜோலார்ப்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீரை சுமந்துகொண்டு சென்னைக்கு புறப்பட்ட ரயிலுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் கொடியசைத்து, இன்று காலை (ஜூலை 12, 2019) 7.20 மணிக்கு இந்தத் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.
ஜோலார்ப் பேட்டையில் இருந்து பெங்களூர் - சென்னை ரயில் தடம் வழியாக, சென்னை வில்லிவாக்கத்துக்கு வந்தடையும் இந்த ரயில் சென்னை வர சுமார் 5 முதல் 6 மணி நேரம் ஆகிறது. மேலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், தண்ணீர் நிரப்பப்பட்ட 50 வேகன்களுடன் இந்த ரயில் சென்னை வந்தடைகிறது.
வில்லிவாக்கம் வந்தடைந்த பின், இந்தத் தண்ணீர், கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்டு பின்னர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
