'திரும்பவும் அவ அப்டி கேட்டா?'... 'அதான் கொன்னேன்'... ‘காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 12, 2019 11:22 AM

தற்கொலைக்கு வற்புறுத்தியதால், காதலிக்கு சயனைடு விஷத்தை கொடுத்து, பின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்று நாடகமாடிய காதலனை, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

girlfriend murdered by her lover in chennai lodge

சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த காதலர்களான சுமர்சிங், காஜல் இருவரும், கடந்த ஜூன் 10-ம் தேதி பிற்பகலில், திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அடுத்த நாள் காலை வெகு நேரமாகியும் அறை திறக்கப்படாததால், விடுதி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் முன்னிலையில் அறை திறக்கப்பட்டது. அப்போது சுமர்சிங், காஜல் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

அருகில் சென்று பார்த்தபோது, காஜல் ஏற்கனவே உயிரிழந்ததும், சுமர்சிங் உயிருக்குப் போராடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுமர்சிங்கை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீசார், காஜலின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துவிட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் காதலர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துள்ளார். இந்நிலையில் இறந்துபோன காஜலின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெறிக்கப்பட்டும், விஷம் அருந்தியும் இறந்து போனது தெரியவந்தது.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், காதலன் சுமர் சிங்கிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சுமர் சிங்கும், காஜலும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர். அவர்களது காதலை ஏற்க மறுத்த காஜல் வீட்டார், அவருக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்தனர். இதனைப் பிடிக்காத காஜல், இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என, பலமுறை காதலன் சுமர் சிங்கிடம் வலியுறுத்தி வந்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதில் சுமர் சிங்குக்கு விருப்பமில்லை எனக் கூறியுள்ளார். ஆனாலும் விடாமல் காதலி காஜல் வற்புறுத்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல், தங்கநகை வியாபாரம் செய்து வருவதாகவும், தங்கத்தை கரைப்பதற்காக சயனைட் தேவைப்படுவதாகவும் கூறி, ஆன்லைனில் சயனைடு பெற்றுள்ளார். கடந்த மாதம் 10-ம் தேதி இருவரும், திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இருவரும் குளிர்பானத்தில் சயனைடை கலந்து குடிக்க முடிவு செய்தனர். குளிர்பானத்தில் கலந்த சயனைடை காதலி காஜல் முழுவதுமாக குடித்தார்.

தற்கொலை செய்வதில் விருப்பம் இல்லாத சுமர், சயனைடு கலந்த குளிர்பானத்தை குடிப்பது போல நடித்துள்ளார். இதனைக் கவனித்த காஜல், அது பற்றி கேட்டு சுமரை தாக்கியுள்ளார். காஜல் உயிர் பிழைத்தால் தம்மை மீண்டும் தற்கொலைக்கு வற்புறுத்துவார் என பயந்த சுமர், துப்பட்டாவால் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் சயனைடு கலந்த குளிர்பானத்தை சிறிதளவு குடித்துவிட்டு மயங்கியுள்ளார்’. சுமரின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், காதலியை கொலை செய்த குற்றத்திற்காக, அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : #MURDERED #CHENNAI #LOVER