'மாநகரப் பேருந்து ஊழியர்கள் 'திடீர் வேலைநிறுத்தம்'... 'ஓடாத பேருந்துகள்'... சிரமத்தில் பொதுமக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jul 01, 2019 10:17 AM
சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், சென்னையில் பேருந்து சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடவில்லை. வழக்கமாக மாத இறுதி நாளில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு விடும் நிலையில், ஜூன் மாதத்திற்கான ஊதியத்தில் 60 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டதால், முழு ஊதியமும் உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
மாதத்தில் முதல் நாளான இன்று அலுவலகம் செல்வோர், கல்லூரி செல்லும் மாணவர்கள் என பலரும் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று அதிகாலை முதல் பெரும்பாலான பணிமனைகளில் இருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை. அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சேம நல பணியாளர்களை கொண்டு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் மிக குறைந்த அளவிலேயே பேருந்துகள் ஓடுகின்றன.
இதனிடையே இன்று இரவுக்குள் 40 சதவீத சம்பளம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் குறைவான அளவிலேயே ஊதியம் வழங்கப்படும் என பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.