‘குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பது குறித்து’... ‘டிஎன்பிஎஸ்சி புதிதாக வெளியிட்ட தகவல்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசின் ஆட்சிப் பணியில் ஒன்றான குரூப்-1 தேர்வு வரும் ஏப்ரல் 5-ம் தேதி நடக்கவிருந்த நிலையில், கொரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலர் விடுத்துள்ள அறிவிப்பு:
“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஜனவரி 20-ல் வெளியிட்ட அறிவிக்கைப்படி குரூப்-1 பணிகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக மூடப்பட்ட வருவதாகவும் இதனால் தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு இல்லாத காரணத்தால் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்வர்கள் குரூப்-1 தேர்வுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து தேர்வு மையங்களுக்குப் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் நோய்த் தொற்றுகளுக்கு உள்ளாகக் கூடும் எனத் தெரிவித்து குரூப்-1 தேர்வினைத் தள்ளிவைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை பேரிடராக அறிவிக்கை செய்துள்ளதாலும், தமிழக அரசே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எடுத்து வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும், தேர்வர்களின் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு ஏப்ரல் 5-ம் தேதி அன்று நடை பெறுவதாக அறிவித்திருந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வுத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்”. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவித்துள்ளார்.
