'குரூப் 4 முறைகேடு'... 'பெரிய பிளான் ஆனா பழைய டெக்னிக்'... 'இடைத்தரகர்களின் மாஸ்டர் ஐடியா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குரூப் 4,மற்றும் குரூப் 2ஏ தேர்வில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இடைத்தரகர்கள் பயன்படுத்திய டெக்னிக் குறித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ முறைகேடு தமிழகத்தில் கடும் புயலைக் கிளப்பியுள்ளது. தினமும் இதுகுறித்த புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 ஏ தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊழியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் குரூப் 4 தேர்வில், தேர்வர்களிடம் பணம் பெற்று முறைகேடுகளுக்கு உதவும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வந்துள்ளது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தற்போது உறுதியாகி இருக்கின்றது.
இதனிடையே இந்த முறைகேட்டில் இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்கள், 'ஆண்ட்ராய்டு' உள்ளிட்ட விலை உயர்ந்த செல்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் குறைந்த விலையிலான பேசிக் மாடல் செல்போன்களை பயன்படுத்தி காரியத்தைக் கச்சிதமாக முடித்துள்ளார்கள். இவர்கள் தமிழகம் முழுவதும் ஒரு நெட்ஒர்க்கை உருவாக்கி அதன் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் தங்களுக்குள் நடக்கும் செய்தி பரிமாற்றம் எக்காரணம் கொண்டும் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள்.
எனவே வாட்ஸ் ஆப் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தி ஏதாவது செய்திகள் கசிந்து விடலாம் என்பதால், அவற்றைப் பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளார்கள். மேலும் பேசும் போது தொலைப்பேசி உரையாடல்களைப் பதிவு செய்துவிடக் கூடாது என்பதிலும் மிகவும் விழிப்புடன் இருந்துள்ளார்கள்.
