‘நடுரோட்டில் இப்டி பண்ணலாமா?’... ‘அட்வைஸ் செய்த மனைவியை’... ‘துரத்தி வந்து வசைபாடிய இளைஞர்’... 'வெளுத்து வாங்கிய கணவர்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவில் பொதுஇடத்தில் சுகாதாரமற்ற முறையில் தும்மிய இளைஞருக்கும் சாலையில் சென்ற தம்பதிக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கடைசியில் அது கைகலப்பில் முடிந்துள்ளது.
கோல்காப்பூர் குஜாரி பகுதியைச் சேர்ந்த பிரசாத் மற்றும் அவரது மனைவி, இருசக்கரவாகனத்தில் தங்கள் குழந்தையுடன் சென்றுள்ளனர். டிராஃபிக் சிக்னலில் வாகனத்தை நிறுத்திய போது ஆரஞ்ச் கலர் டி-சர்ட் அணிந்தஇளைஞர் ஒருவர், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து நின்றுள்ளார். சிக்னலில் நிற்கும் போது இரண்டு முறை அந்த இளைஞர் தும்மியுள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞரிடம் கொரோனா அச்சத்தில் இருக்கும்போது, பொது இடத்தில் இப்படி சுகாதாரமற்ற முறையில் தும்மலாமா? கைக்குட்டை வைத்துக்கொள்ளக்கூடாதா? உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்லுங்கள் என்று பிரசாத்தின் மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தம்பதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த தம்பதியினர் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.
தொடர்ந்து வந்த அந்த இளைஞர் தகாத வார்த்தைகளில் அந்தத் தம்பதியினரைத் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்தத் தம்பதியினர் சாலையில் வைத்தே அந்த இளைஞரைத் தாக்கியுள்ளனர். வாய்தகராறில் ஆரம்பித்துக் கடைசியில் கைகலப்பில் முடிந்து விட்டது. சாலையில் இருந்த பொதுமக்கள் அந்தத் தம்பதியைச் சமாதானப்படுத்தினர். சுமார் 10 நிமிடங்கள் இந்த சண்டை நடந்துள்ளது,
இதுதொடர்பான வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியதையடுத்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தன் ட்விட்டர் பக்கத்தில், “தனக்கும் சுற்றுப்புறத்தில் இருக்கும் மக்களுக்கும் ஆபத்தை விளைக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.