'டீச்சர்... என்னோட 'மார்க்'க வேற யாருக்காவது கொடுக்க முடியுமா!?'... மாணவரின் விநோதமான கோரிக்கை... தேர்வுத்தாள் திருத்திய ஆசிரியர் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்தேர்வுத்தாளில் ஆசிரியருக்கு எழுதப்பட்ட மாணவர் ஒருவரின் கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவர் ஒருவர் அவருடைய தேர்வுத்தாளில், “உங்களால் முடிந்தால் என்னுடைய போனஸ் மதிப்பெண்களை தேவைப்படும் வேறு யாருக்காவது கொடுத்துவிடுங்கள்” என்று எழுதியுள்ளார்.
வின்ஸ்டன் லீ என்ற ஆசிரியரின் நன்கு படிக்கக்கூடிய மாணவர் ஒருவர், அவருடைய தேர்வுத்தாளில், அவருடைய 5 போனஸ் மதிப்பெண்களை, ஏதாவது ஒரு காரணத்திற்காக படிக்க முடியாமல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் எந்த மாணவருக்காவது கொடுத்து விடுங்கள் என்று எழுதியுள்ளார். இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வின்ஸ்டன் லீ, மாணவரின் நேர்மையை பார்த்து பூரிப்படைவதாக எழுதியுள்ளார். மேலும் அந்த மதிப்பெண்களை இவருக்கு தான் கொடுக்க வேண்டும் அல்லது இந்த காரணத்தால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மாணவருக்கு கொடுக்க வேண்டும் என்று இல்லாமல், குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் யாருக்காவது கொடுத்துவிடுங்கள் என்று எழுதியுள்ளது தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக வின்ஸ்டன் லீ தெரிவித்துள்ளார்.
இந்த சமூக வலைதளப் பதிவை பலர் பாராட்டியிருந்தாலும், ஒரு சிலர் இதனை விமர்சித்தும் உள்ளனர். மதிப்பெண்களை எல்லாம் நன்கொடை போல கொடுக்கக்கூடாது என்றும் அப்படி கொடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்களில் யாராவது மருத்துவராக வந்தால், அவரிடம் எப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
