'சின்ன வயசுலயே 'அம்மா' தவறிட்டாங்க, 30 வயசுல 'அவரும்' என்ன விட்டு போய்ட்டாரு...' தடைகளை தாண்டி 105 வயதில் தன் லட்சியத்தை அடைந்த பாட்டி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 06, 2020 08:14 AM

கேரளாவில் பாகீரதி அம்மா  என்ற 105 வயது பாட்டி, 4 ஆம் வகுப்பு KSLM தேர்வெழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற சம்பவம், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

The 105-year-old granny is a 4th grade KSLM exam taker in Kerala

கேரள மாநிலத்தில் புதிதாக மாற்றுக்கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி கற்க வாய்ப்பிழந்தோர், அந்தந்த வகுப்புகளுக்கு இணையான படிப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம். அந்த வகையில், கடந்தாண்டு 4 ஆம் வகுப்புக்கு இணையான சமச்சீர் தேர்வு நடைபெற்றது. அதில், கேரள மாநிலம் திரிக்கருவா பகுதியைச் சேர்ந்த 105 வயது நிரம்பிய, பாகீரதி அம்மா என்ற பாட்டியும் தேர்வு எழுதினார்.

இந்த சமச்சீர் தேர்வின் முடிவுகள் கடந்த பிப்ரவரி 4 அன்று வெளியானது. அதில், பாகிரதி அம்மா 74.5 சதவீதம் மதிப்பெண் பெற்று, 4 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றார். சுமார் 20 ஆயிரம் பேர் சமச்சீர் தேர்வை எழுதினர். அவர்களில் பெரும்பாலானோர் இளையோர்களே. அவர்களுக்கு மத்தியில் 105 வயது நிரம்பிய பாகீரதி அம்மா தேர்வு எழுதியது, அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

பாகீரதி பாட்டிக்கு, இளம் வயதில், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. ஆனால், சிறு வயதில் அவரது தாய் இறந்ததால், சகோதரர்களை கவனிக்கும் நிலை ஏற்பட்டது.அடுத்து, 30 வயதில் பாகீரதியின் கணவர் இறந்ததால், ஆறு குழந்தைகளை வளர்க்க வேண்டிய நிலை உருவானது. இந்நிலையில், 105 வயதில், நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நாட்டின் மூத்த மாணவியாகி உள்ளார்.முதுமை காரணமாக பாகீரதி அம்மாள் கூடுதல் நேரம் தேர்வு எழுதியுள்ளார். இதில் 275 மதிப்பெண்ணுக்கு 205 மதிப்பெண் எடுத்துள்ளார்.

தற்போது தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திரிக்கருவா பஞ்சாயத்து தலைவர், பாகீரதி அம்மாவின் வீட்டிற்கு நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மேலும், கேரள எழுத்தறிவு இயக்ககத்தின் நல்லெண்ண தூதராக பாஹிரதி நியமிக்கப்படுகிறார்.

இதன் மூலம் எழுத்தறிவு இல்லாமல், ஏதோ ஒரு காரணமாக கல்வி பயில முடியாமல் இடையில் நிற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாகீரிதி அம்மா முன்னுதாரணமாக திகழ்வதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : #EXAM