'பொதுத் தேர்வுகளில் மாணவிகளை’... ‘இந்த ஆசிரியர்கள் மட்டும் சோதனை செய்ய தடை’... ‘தேர்வுத்துறை அதிரடி அறிவுறுத்தல்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்ய தடை விதித்து அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும் படையில் நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவிகளை பறக்கும் படையில் உள்ள ஆண் ஆசிரியர்கள் சோதனை செய்யக் கூடாது என்றும், பெண் ஆசிரியர்களை கொண்டு தான் சோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும் படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பறக்கும் படை உறுப்பினர்கள் தேர்வு எழுதும் வளாகத்தினை வகுப்பறை மட்டுமின்றி, வெளிப்பகுதி, கழிப்பறை, தளப்பகுதி ஆகியவற்றையும் பார்வையிட்டு முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதனை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
