'சினிமாவை' மிஞ்சும் 'டி.என்.பி.எஸ்.சி.' முறைகேடு... பக்கா 'ஸ்கிரீன் பிளே'... "எப்பா 'அஸிஸ்டன்ட் டைரக்டர்ஸ்' நோட் பண்ணுங்கப்பா..."

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 27, 2020 07:32 AM

குரூப்-4 முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஊழியர், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் கொடுத்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார். ஒரு ஆக்ஷன் திரில்லர் கதையைப் போல் உள்ள இந்த சம்பவம் போலீசாரையே திடுக்கிட வைத்துள்ளது.

TNPSC abuse case - The confession of the arrestee

குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் ரூ.15 லட்சம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் பணியாற்றும் ஓம்காந்தனுக்கும் சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும் அறிமுகம் ஆகியுள்ளது. தனக்கு தெரிந்த நபர்களுக்கு குரூப் 4 தேர்வில் முறைகேடாக வெற்றி பெறுவதற்கு உதவ ஓம்காந்தனிடம் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.

இதற்காக 15 லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 2 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார் ஜெயக்குமார். தேர்வு எழுதும் தனக்கு வேண்டியவர்களுக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த கீழக்கரை, ராமேஸ்வரம் பகுதி மையங்களை தேர்வு செய்யுமாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக காரில் சென்று ராமேஸ்வரத்தில் தேர்வர்களுக்கு மை மறையக்கூடிய சிறப்பு பேனாவை கொடுத்துள்ளார்.

தேர்வு முடிந்த பின் ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் இருந்து விடைத்தாள்களை பெற்று சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணிக்கு தட்டச்சர் மாணிக்கவேல் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக ஓம்காந்தன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர்கள் திட்டமிட்டபடி தேர்வு முடிந்த பின்பு 1-09-2019 அன்று இரவு 8 மணிக்கு விடைத்தாள் பண்டல்களை ஏபிடி பார்சல் சர்வீஸ் வாகனத்தில் ஏற்றி அதன் சாவியை ஓம்காந்தன் வைத்துள்ளார். அன்று இரவு 9.50 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டுள்ளார்கள். அந்த வாகனத்தை ஜெயக்குமார் தனது காரில் பின் தொடர்ந்துள்ளார்.

இரவு 10.30 மணியளவில் சிவகங்கையை தாண்டி சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த தட்டச்சர் மாணிக்கவேல், வாகன ஓட்டுநர், பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ்க்காரர் ஆகியோரை ஓம்காந்தன் சாலையை தாண்டி எதிர்புறம் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்று சாப்பிட வைத்துள்ளார். பின்னர் அவர் மட்டும் வெளியே வந்து விடைத்தாள்கள் வைத்திருந்த வாகன அறையின் சாவியை ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார்.

அவரும் பூட்டை திறந்து அதில் இருந்த ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களை சேர்ந்த விடைத்தாள் பண்டல்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதற்கு பிறகு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு சுமார் அரை மணி நேரம் கழித்து அனைவரும் வாகனத்திற்கு சென்று சென்னை நோக்கி புறப்பட்டனர்.

போகும் வழியில் ஜெயக்குமார் ஓம்காந்தனிடம் விக்கிரவாண்டியில் ஒரு டீக்கடை ஓரம் டீ குடிப்பதற்காக அதிகாலை சுமார் 5.30 மணியளவில் நிறுத்த கூறியுள்ளார்.

அந்த இடத்தில் ஓம்காந்தனிடம் ஜெயக்குமார் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் பண்டல்களை வாகன அறையின் உள்ளே வைத்து பூட்டி சாவியை திரும்ப கொடுத்துள்ளார். அதற்கு பிறகு வாகனம் சென்னைக்கு புறப்பட்டு 02.09.2019 அன்று மதியம் 1.30 மணியளவில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் விடைத்தாள்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் இரவில் நடைபெற்ற இந்த சம்பவம் சிபிசிஐடி போலீசாரை திடுக்கிடச் செய்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் கிடைத்த இந்த தகவல்கள் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் உள்ளது.

Tags : #TNPSC #ABUSE CASE #RAMANATHAPURAM #CBCID #CONFESSION