'வேற வழி தெரில!'.. 'மண்ணெண்ணையுடன் வந்த.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர்!'.. காவல் நிலையம் முன்பு நடந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 20, 2019 05:53 PM
கிருஷ்ணகிரி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரக் கோரிய நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 16 பேருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷணகிரி அருகே, போச்சம்பள்ளியில் உள்ள வேலாவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். சுமார் 20க்கும் மேற்பட்டோரைக் கொண்ட இவரது குடும்பத்தில் உள்ள நிலையில், இவர் தனக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பக்கத்து வீட்டில் வசிக்கும் அருணாச்சலம் மற்றும் கேசவன் ஆகியோர் ஆக்கிரமித்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே நேற்று திடீரென அந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்ப்படும் இடத்தில் அருணாச்சலம் தரப்பினர் கட்டிடம் எழுப்ப முயற்சித்ததாக, மத்தூர் காவல் நிலையத்திற்கு சென்ற முருகேசன், காவல் ஆய்வாளர் பழனிவேலிடம் முறையிட்டுள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாமல் இருப்பதாகக் கூறி முருகேசனும், அவரது குடும்பத்தில் உள்ள 2 பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேரும் தத்தம் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றிக்கொண்டு தீவைத்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றனர்.
ஆனால் அருகில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேரும் தீவைத்துக் கொளுத்திக்கொண்டு கூட்டாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.